கேரளாவில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், நிபா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோவை அரசு மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, "தமிழ்நாட்டில் பொது சுகாதாரத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் தேவையான முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை. ஏதேனும் நிபா வைரஸ் அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வேண்டும்.
மருத்துவக்கல்லூரி முதல்வர் அசோகன் அதற்காக கோவை அரசு மருத்துவமனையில் நிபா வைரஸ் பாதித்தவர்களுக்கு சிகிச்சையளிக்க 30 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நிபா வைரஸ் குறித்து ஏதாவது சந்தேகம் இருந்தால் அரசு அறிவித்துள்ள 104 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்" என தெரிவித்தார்.