கோவை:தமிழ்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே ஐந்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிபிஐ விசாரித்து வரும் இந்த வழக்கில் நேற்று மாலை ஹேரேன் பால், பாபு, அருளானந்தம் என்ற மூன்று பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனையறிந்த திமுக மகளிரணி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் 20க்கும் மேற்பட்டோர் கோவை நீதிமன்றம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிமுக அரசை கண்டித்தும் குற்றவாளிகளை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் களைந்து செல்லாததால் அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் 3 பேர் கைது இவர்கள் மூன்று பேரை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி 376-டி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இவர்கள் மீது மேலும் இரண்டு பெண்கள் புகார் அளித்துள்ளதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்