கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தங்களது வளர்ப்பு நாய்களுக்கு இறந்த முயலை உணவாகக் கொடுக்கும் காணொலியை டிக்டாக்கில் சில தினங்களுக்கு முன்பு பதிவேற்றியுள்ளார்.
இந்தக் காணொலி, சமூக வலைதளங்களில் பரவத்தொடங்கியதையடுத்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை தொடங்கிய மதுக்கரை வனத்துறையினர், காணொலியில் உள்ள ஒருவரின் முகவரியைக் கண்டறிந்து கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவரது பெயர் கார்த்திக் என்பதும், வாகனத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்த காட்டு முயலை எடுத்து, தனது நாய்களுக்கு உணவாகக் கொடுப்பதை படம்பிடித்து டிக்டாக்கில் பதிவேற்றம் செய்ததும் தெரியவந்தது.
மேலும், இவருடன் இணைந்து காணொலி பதிவிட்ட கார்த்திக்கின் நண்பர்கள் குமார், தமிழ்வாணன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, மூவர்களுக்கும் தலா 7 ஆயிரம் ரூபாய் வீதம் 21 ஆயிரம் ரூபாயை அபராதமாக விதித்து இறுதியில் எச்சரித்து விடுவித்தனர்.
சாலையில் இறந்து கிடந்த காட்டு முயலுடன் டிக்டாக் செய்த நபர் இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், "வன விலங்குகளை வைத்து டிக்டாக் செய்வது சட்டப்படி குற்றம். வனவிலங்குகள் உயிரிழந்து கிடப்பதைப் பார்த்தால், வனத்துறையினருக்குத் தகவல் அளிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதை அறவே தவிர்க்க வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க:திருமணத்தை மீறிய உறவை கண்டித்த கணவர்: தூக்கமாத்திரை கொடுத்து கொன்ற மனைவி!