கோவை மாவட்டம் சாடிவயல் வனப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலைச்சாரலிலுள்ள இந்த வனப்பகுதியில் அரிய வகை மூலிகைச் செடிகள், விலை மதிப்புள்ள சந்தனம், தேக்கு உள்ளிட்ட மரங்கள் அதிகளவில் உள்ளன. வனப்பகுதியிலுள்ள சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் அடிக்கடி வெட்டி கடத்தி வருகின்றனர். இதனைத் தடுக்க போளுவாம்பட்டி வனத்துறையினர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும், கேரளாவிலிருந்து வரும் சில நபர்கள் இந்தச் சந்தன மரங்களை வெட்டிகொண்டு செல்வது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் சர்க்கார்போரத்தி கிராம வனப்பகுதியிலுள்ள சந்தன மரங்களை சில நபர்கள் கடத்திச் சென்றதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலுவம்பட்டி வனத்துறையினர் சர்க்கார்போரத்தி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கேரளாவைச் சேர்ந்த இருவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரகு, ரங்கசாமி ஆகிய இருவரும் சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ரகுவையும் ரங்கசாமியையும் பிடித்து விசாரணை செய்த வனத்துறையினர், அவர்கள் வீட்டில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.