கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் ராசாமணி, கோவை மாநகர ஆணையர் ஷர்வன்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில், கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத் துறை பணிகள், கோவை மாவட்ட விவசாயம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக கோவை மாநகர மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க, 166 கோடி ரூபாய் செலவில் பில்லூர் சுரங்கப் பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கோயம்புத்தூரில் நவீன பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. சேலம், கோவை மாநகரத்தில் அதிக வாகனங்கள் வருவதை தவிர்க்கும் பொருட்டு மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தூங்கா நகருக்கு ரூ.1,000 நிவாரணம் - அரசாணை வெளியீடு