கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், காவல் நிலையம் பின்புறம் உள்ள கருமத்தம்பட்டி புதூர் பகுதியில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், சந்தேகத்திற்கிடமான வகையில் அரசு அலுவலர் குடியிருப்புப்பகுதிக்குள் ஒரு தம்பதியினர் தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற காவலர்கள், அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, டீத்தூள் மூட்டைகளுக்கு இடையே 150 கிலோ எடை கொண்ட 75 கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், அத்தம்பதியினர் தேனி மாவட்டம், தேவாரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ், அவரது மனைவி கலாவதி என்பது அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து, அவர்களைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு அங்கு வந்து இவர்கள் இருவரும் தங்கியதும், தேனியிலிருந்து கஞ்சா கடத்தி வந்து கருமத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதியில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த 150 கிலோ கஞ்சாவை அவர்கள் கேரளாவுக்கு கடத்த வைத்திருந்தது தெரிய வந்தது. இவர்களுக்கு யார் கஞ்சா விநியோகம் செய்தார்கள், எந்த வழியாக கஞ்சாவைக் கொண்டு வந்தார்கள் என்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கஞ்சா போதையில் அதிகரிக்கும் குற்றங்கள்: திணறும் காவல் துறை!