கோயமுத்தூர் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்டபோதை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பொள்ளாச்சி கூட்செட் சாலையில் உள்ள சாதிக் என்பவரின் குடோனில் மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, குடோனில் ஒரு டன் குட்கா, ஹான்ஸ், புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த குடோனிற்கு அலுவலர்கள் சீல் வைத்தனர். ஆய்விற்குப்பின் அலுவலர் தமிழ்செலவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களின் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் இருக்கும் எனவும் மாநில நியமன ஆணையர், மாவட்ட ஆட்சியர் உத்திரவின் பேரில் பள்ளிகள், கல்லூரிகள், அருகாமையில் உள்ள சில்லறை விற்பனை நிலையம், மளிகை பொருள் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,கோவையில் கடந்த சில மாதங்களாக 3 டன் தடைசெய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை அலுவர்கள் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் பொதுமக்கள் உணவு பாதுகாப்புத்துறை வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் தகவல் தெரிப்பவர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என அவர் தெரிவித்தார். அப்போது, உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் சுப்புராஜ், செல்வபாண்டி, காளிமுத்து ஆகியோர் உடன் இருந்தனர்.