கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை வனச்சரக வனப் பணியாளர்கள் குழுவினர், பவானி சாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளையொட்டியுள்ள பகுதிகளில் நேற்று (ஜூன் 24) மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். மயில்மொக்கை சரக பகுதியில், இறந்த சடலத்தின் துர்நாற்றம் வீசியுள்ளதால், அப்பகுதியில், தேடுதல் பணியை தொடங்கினர். இருட்டும் நேரமானதால் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருந்ததாலும் தேடுதலைத் தொடர முடியாமல் போனது.
இதையடுத்து, இன்று (ஜூன் 25) காலை அதே பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்டபோது பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டறிந்தனர். உடனடியாக உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் முன்னிலையில், கால்நடை மருத்துவர்கள், சுகுமார், சதீஸ்குமார், தியாகராஜன் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு மேற்கொண்டனர்.