கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு காரணங்களால் 10 யானைகள் உயிரிழந்துள்ளன. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டம், கோவை வனக்கோட்டம் என அனைத்து பகுதிகளிலும் யானைகளின் இறப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
இதில் கோவை வனக்கோட்டத்தில் அதிகபட்சமாக எட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. மின்வேலியில் சிக்கி உயிரிழப்பு, அவுட்டுக்காய் எனப்படும் நாட்டு வெடி வெடித்து யானை உயிரிழப்பு, யானைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழப்பு, உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு என வனத்துறையினர் பல்வேறு காரணங்கள் கூறினாலும் யானைகளின் உயிரிழப்பை கட்டுப்படுத்த வனத்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது, சூழலியல் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
முறையாக ரோந்து செல்வதில்லை:இதுகுறித்து சூழலியல் ஆர்வலர் மோகன்ராஜ் கூறுகையில், "மூன்று மாதங்களில் கோவை மாவட்டத்தில் இவ்வளவு யானைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வனத்துறையினர் வனப்பகுதிக்குள் முறையாக ரோந்து செல்லாததால் வனப்பகுதிக்குள் உயிரிழக்கும் வனவிலங்குகளை கண்டுபிடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
கோவையில் 3 மாதங்களில் 10 யானைகள் உயிரிழப்பு வனப்பகுதிக்குள் வன உயிரினங்கள் உயிரிழந்தால் அதை வெளிப்படுத்த வனத்துறையினர் ஆர்வம் காட்டுவதில்லை. வன விலங்குகள் உயிரிழந்தால் சூழலியல் ஆர்வலர்களுக்கு தெரியப்படுத்தவும் வனத்துறையினர் விரும்புவதில்லை. அதுபோல் பத்திரிகையாளர்களுக்கும் எந்த ஒரு தகவல்களையும் வனத்துறையினர் அளிப்பதில்லை. அவர்களாகவே புகைப்படங்களை எடுத்து அனுப்புகின்றனர். இதன் காரணமாக வன உயிரினங்களின் உயிரிழப்பு குறித்த உண்மை தன்மை கேள்விக்குறியாகிறது" எனக் கூறினார்.
உயிரிழைப்பை தடுக்க நடவடிக்கை இல்லை:யானைகள் உயிரிழப்பு குறித்து கோயமுத்தூர் வன உயிரின பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் முருகானந்தம் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக 10க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் மதுக்கரை பகுதியில் ரயில் மோதியதில் கருவுற்ற யானை உள்பட மூன்று யானைகள் உயிரிழந்தன.
இதனைத்தொடர்ந்து வால்பாறை, பொள்ளாச்சி பகுதிகளிலும், கோவை வனக்கோட்டத்திலும் யானைகள் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக கோவை வனக்கோட்டத்தில் எட்டு யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன. மின் வேலியில் சிக்கி உயிரிழந்த யானை குறித்தும் நாட்டு வெடி வெடித்து யானை உயிரிழந்தது குறித்தும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வனத்துறை வெளிப்படையாக இல்லை:ஆனால் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. இதுபோன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கைது செய்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுத்தால் மற்றவர்கள் இதுபோன்ற தவறுகளை செய்ய பயப்படுவார்கள். கோவை வனக்கோட்டத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெறும் சம்பவங்கள் வருந்தத்தக்கதாக உள்ளது. யானை உள்ளிட்ட வன விலங்குகள் வனப்பகுதிக்குள் உயிரிழந்தால் வெளியே தெரிய காலதாமதமாகிறது. அதுமட்டுமில்லாமல் யானை உயிரிழப்பு குறித்து தகவல்கள் மாறுபட்டு வெளியே வருகிறது. வனத்துறையினர் இந்த விஷயத்தில் வெளிப்படையாக இல்லை.
யானைகள் உயிரிழந்து எலும்புக்கூடுகளாகவும், அழுகிய நிலையில் மட்டுமே கண்டுபிடிக்கப்படுகிறது. யானை உயிரிழந்தது தெரிய வந்தும் அதற்கான காரணத்தை மறைக்க கால தாமதமாக யானை உயிரிழந்ததை வெளியே சொல்கிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. இதே நிலை நீடித்தால் முன்னொரு காலத்தில் டைனோசர் இருந்தது என புத்தகங்களில் படிப்பதை போல யானைகள் வாழ்ந்தது என படிக்க வேண்டிய நிலை ஏற்படுமோ" எனக் கவலை தெரிவித்தார்.
இதையும் படிங்க: கோவையில் ரயில் மோதி யானைகள் உயிரிழந்த சம்பவம்: வன உயிரினப்பாதுகாவலர் பிரத்யேகப் பேட்டி