கோவை சாய்பாபா காலணி பகுதியை சேர்ந்தவர் முகமது ரியாஸ். இவர் ஓஎல்எக்ஸ் (OLX) இணையதளம் மூலம் இரு சக்கர வாகனத்தை வாங்க பதிவு செய்துள்ளார். அப்போது கேரளாவில் உள்ள இளைஞர் ஒருவர், தான் ராணுவ தளத்தில் வேலை செய்வதாகவும், தன்னிடம் ராணுவ பதிவு எண் கொண்ட இரு சக்கர வாகனம் உள்ளது என்றும் பதிவிட்டுள்ளார்.
இவரது பதிவை பார்த்த இளைஞர் முகமது ரியாஸ், அவரிடம் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொள்வதாக தெரிவித்து, முன்தொகையாக 45 ஆயிரம் ரூபாய் அந்த இளைஞரின் கணக்கில் செலுத்தியுள்ளார். முகமது ரியாஸிடம் 45 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்ட கேரள இளைஞர், பணம் வரவில்லை என்று நாடகமாடியுள்ளார். இதனால் முகமது ரியாஸ் மேலும், ஒரு லட்சம் செலுத்தியதாகத் கூறப்படுகிறது.
ஓஎல்எக்ஸில் 1 லட்சத்தை இழந்த இளைஞர் இந்நிலையில் அந்த இளைஞரிடம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகமது ரியாஸ் உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து முகமது ரியாஸ் சைபர் கிரைம் காவல்துறையினரிடம் கூறுகையில், "தன்னை ஏமாற்றிய நபர் கேரள ராணுவ தளத்தில் பணிபுரிவதாகக் கூறி ராணுவ வீரர்களின் புகைப்படங்களை பதிவிட்டும், ஆதார் கார்டு, ராணுவ வீரராக இருக்கும் அடையாள அட்டை புகைப்படங்களை அனுப்பியதை நம்பி பணத்தை அவரது வங்கி கணக்கில் செலுத்தினேன்" என்றார்.
மேலும், முகமது ரியாஸ் கொடுத்த தகவல்களை வைத்து சைபர் கிரைம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், முகமது ரியாஸை ஏமாற்றிய நபர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், இதேபோன்று ஒரு பெண்ணிடம் பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது. எனவே, மிக விரைவில் அந்த இளைஞர் கைது செய்யப்படுவார் என்று சைபர் கிரைம் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு: குற்றவாளி குறித்து தகவல் அளித்தால் தக்க சன்மானம்!