கோவை:கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர், தொழிலதிபர் ரமேஷ். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் சென்னையைச் சேர்ந்த பல் மருத்துவர் அரவிந்தன் - துர்கா பிரியா தம்பதியர் அறிமுகம் ஆகியுள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரும் பொருட்களை இறக்குமதி செய்து, அதன் மூலம் தாங்கள் பணம் சம்பாதித்து வருவதாகவும், தாங்களும் இத்தொழிலில் சேரலாம் என்றும் ரமேஷிடம் கூறியுள்ளனர். இந்த நிலையில் தான் பல் மருத்துவர் தம்பதியர், தொழிலதிபர் ரமேஷிடம் ரூ.1.24 கோடியை மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், துருக்கியில் இருந்து ஆப்பிள் பழங்களுடன் கன்டெய்னர் வருவதாகவும், அதற்கு ரூ.1.24 கோடியை செலுத்தினால், ரூ.2 கோடி லாபம் பெறலாம் என தொழிலதிபர் ரமேஷிடம், பல் மருத்துவர் அரவிந்தன் - துர்கா தம்பதியர் கூறியுள்ளனர்.
கூடுதல் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அரவிந்தனிடம் ரூ.1.24 கோடியை ரமேஷ் கொடுத்துள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள் கன்டெய்னர் வராமல் இருந்துள்ளது. இதனால் முதலீடு செய்த பணத்தை திருப்பித் தருமாறு ரமேஷ் அரவிந்தனிடம் கேட்டுள்ளார். ஆனால் பணத்தை தராமல், அரவிந்தன் தம்பதியர் இழுத்தடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பலமுறை கேட்டும் அரவிந்தன் - துர்கா பிரியா தம்பதியர் பணத்தை தொழிலதிபர் ரமேஷிடம் கொடுக்கவில்லை.
தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலதிபர் ரமேஷ், கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் சென்னை சென்று, பல் மருத்துவர் அரவிந்தனை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரமேஷிடம் இருந்து பெற்ற ரூ.1.24 கோடி மூலம் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியது அம்பலமாகியுள்ளது.