சென்னை: பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் செயல் அலுவலர் அரவிந்தன், பிரபல யூடியூபர் இளைய பாரதம், கார்த்திக் கோபிநாத் மீது புகார் ஒன்றினை கொடுத்தார். அதில், “இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோயில் பெயரை பயன்படுத்தி, இணையதளம் மூலமாக இளைய பாரதம் யூடியூப் சேனல் உரிமையாளர் கார்த்திக் கோபிநாத் என்பவர் 34 லட்சம் ரூபாய் வசூல் செய்து, மோசடியில் ஈடுபட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், ஆவடி மிட்னமல்லியைச் சேர்ந்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இன்று (மே 30) காலை அவரது அலுவலகத்தில் வைத்து கைது செய்தனர். பின்னர், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் கார்த்திக் கோபிநாத்திடம் சுமார் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த கிடுக்குப்பிடி விசாரணை குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில், யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(d) IT Act தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாள்கள் நீதிமன்ற காவல் - பாஜகவினர் திரண்டதால் போலீசார் குவிப்பு! பின்னர், அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் கோபிநாத் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கார்த்திக் கோபிநாத்தின் ஆதரவாளர்களான பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், பாஜக விளையாட்டு துறை மேம்பாட்டு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஸ்வீன் தலைமையில் ஏராளமானோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் குவிந்தனர்.
காவல்துறையினரின் தடுப்பு நடவடிக்கையால், கூடிய அனைவரும் கலைந்து சென்றனர். இதனைத்தொடர்ந்து, அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்போதும், ஏராளமான பாஜகவினர் அம்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், யூடியூபர் கோபிநாத் அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த அம்பத்தூர் விரைவு நீதிமன்றம், மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:யூடியூபர் கார்த்தி கோபிநாத் கைது - சுப்பிரமணிய சுவாமி, அண்ணாமலை கண்டனம்