சென்னை டாக்ஸ் யூ-ட்யூப் சேனலில் பெண் ஒருவர் ஆபாசமாகப் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியது. பெசன்ட் நகர்,திருவான்மியூர் கடற்கரைக்கு வரும் பெண்களை குறிவைத்து பணம் கொடுத்து ஆபாசமாகப் பேசச் சொல்லி வற்புறுத்தி பேட்டி எடுப்பதாக, சென்னை டாக்ஸ் யூ-ட்யூப் சேனல் மீது ஒருவர் சாஸ்திரி நகரில் புகார் அளித்திருந்தார்.
அதனடிப்படையில், கடந்த 11ஆம் தேதி பணம் கொடுத்து, ஆட்களை வரவழைத்து ஆபாசப் பேட்டி எடுத்து ஒளிபரப்பிய சென்னை டாக்ஸ் யூ-ட்யூப் சேனலைச் சேர்ந்த அசென் பாட்ஷா, கேமரா மேன் அஜய் பாபு (31), உரிமையாளர் தினேஷ் ஆகிய 3 பேரைக் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோவில் ஆபாசமாகப் பேசி பெண் பேட்டி ஒன்றை அளித்தார். அதில், காசு கொடுத்து தன்னை அழைத்து வந்து ஆபாசமாக பேசச் சொல்லியதாகவும், எனவே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால், அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் ஏதும் வழங்கவில்லை எனவும்; பொய்யான கருத்துகளைத் தெரிவித்ததால் அந்தப் பெண்ணுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.
சென்னை டாக்ஸ் சேனலின் வீடியோக்களை நீக்கிய யூ-ட்யூப் மேலும், யூ-ட்யூப்பில் ஆபாசமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் வீடியோ இருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளரை, உடனடியாக நீக்க வேண்டும் என காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சென்னை டாக்ஸ் யூ-ட்யூப் சேனலில் உள்ள வீடியோக்களை நீக்கக் கோரி, யூ-ட்யூப் நிறுவனத்திற்குச் சென்னை சைபர் க்ரைம் காவல் துறை கடிதம் அனுப்பியது. அதனடிப்படையில் சென்னை டாக்ஸ் யூ-ட்யூப் சேனலில் உள்ள வீடியோக்களை யூ-ட்யூப் நிறுவனம் நீக்கியுள்ளது.
இதே போல் எத்தனை பேருக்கு பணம் கொடுத்து பேச வைத்துள்ளனர் என்பது குறித்து விசாரிக்க, கைது செய்யப்பட்ட மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சைபர் க்ரைம் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.