சென்னை: ராஜாஜி சாலை இந்தியன் வங்கி அருகே நேற்று (மே 08) மதியம் புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கார்த்திக்கின் செல்போனை பறித்துச்சென்றனர். உடனடியாக செல்போன் கொள்ளையர்களை பிடிக்க கார்த்திக் முயற்சித்தார். அப்போது அவர் கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட அருகிலிருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனையடுத்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் செல்போன் பறிப்புச்சம்பவம் தொடர்பாக அவர் புகார் அளித்தார். இந்நிலையில் தலைமைச்செயலகம் அருகே உள்ள கொடிமர இல்ல சாலையில் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த 2 இளைஞர்கள் மின்மாற்றி மீது மோதி 10 அடி உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து, போக்குவரத்து காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக படுகாயமடைந்த இருவரையும் அருகிலிருக்கும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் கார்த்திக் என்பவரிடம் செல்போன் பறித்த இளைஞர்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தகவல்கள், விபத்தில் சிக்கிய இளைஞர்களின் தகவல்களுடன் ஒத்துப்போனதால், புகார்தாரர் கார்த்திக்கை அழைத்து வந்து ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் இளைஞர்களை அடையாளம் காண காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் சிக்கல்: கார்த்திக் சொன்ன தகவலின்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் இந்த இரண்டு இளைஞர்கள் தான் என காவல் துறையினருக்குத் தெரியவந்தது. இந்நிலையில் விபத்தில் சிக்கிய இரண்டு இளைஞர்களும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். விபத்தில் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களில் ஒருவருக்கு முகம் முழுவதும் அழிந்த காரணத்தினாலும், மேலும் மற்றொரு இளைஞர் பற்றிய தகவல் தெரியாததாலும் இறந்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் காவல் துறையினர் தவித்துவருகின்றனர்.