தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாமூல் தர மறுத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த கொடூரம்... சென்னையில் பகீர் சம்பவம்! - asalt

Chennai Crime News: பல்லாவரம் அருகே மாமூல் தர மறுத்த ரியல் எஸ்டேட் அதிபரைச் சரமாரியாகத் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் பணத்தை மூன்று பேர் கொண்ட கும்பல் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chennai Crime News
மாமூல் தர மறுத்த ரியல் எஸ்டேட் அதிபரை சரமாரியாகத் தாக்கிய இளைஞர்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 25, 2023, 3:57 PM IST

Updated : Dec 25, 2023, 4:38 PM IST

சென்னை:பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேட்டையைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (33). இவர் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஆயுத பூஜை அன்று அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்களான லோகேஷ் (எ) சிம்சன் (19), சந்தோஷ் (19) மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகியோர் இணைந்து ஹரிஹரனைச் சந்தித்து, ஆயுத பூஜை கொண்டாட தங்களுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் எனக் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் பணம் தர மறுத்த ஹரிஹரன், இதுதொடர்பாக இளைஞர்களின் தந்தைகளிடமும் புகார் அளித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் ஹரிஹரனை பழி வாங்கும் எண்ணத்தில், சரியான சமயம் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி இரவு 11 மணியளவில் அனகாபுத்தூர் பக்தவச்சலம் நகர் பிரதான சாலை வழியாக ஹரிஹரன் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த லோகேஷ், சந்தோஷ் மற்றும் 17 வயது சிறுவன் மூன்று பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்து வைத்திருந்த கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஹரிஹரனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவரிடமிருந்த சுமார் 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, ஹரிஹரனின் அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அப்பகுதி மக்கள், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹரிஹரனை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், ஹரிஹரனைத் தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஒருவரை விரட்டிப் பிடித்த அப்பகுதியினர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும், கடந்த ஆயுத பூஜை அன்று பணம் கேட்ட போது, தங்களது தந்தையிடம் மாட்டிவிட்டதால், அவரை பழி வாங்கவே இந்த தாக்குதலை செய்ததாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து, தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர். மேலும், தப்பிச்சென்ற லோகேஷ் மற்றும் 17 வயது சிறுவன் இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே சங்கர் நகர் காவல்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற இளைஞர்களின் தொல்லை அதிகரித்து வருவதாகவும், காவல்துறையினர் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தெரு நாயை கல்லால் அடிப்பதை தட்டிக் கேட்ட ஒரு குடும்பத்தையே ஒரு கும்பல் கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாலை விபத்தில் பலியான நபரை பார்க்கச் சென்ற 4 பேர் உடல் நசுங்கி பலி.. தெலங்கானாவில் நிகழ்ந்த கோர விபத்து!

Last Updated : Dec 25, 2023, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details