சென்னை:உலக அளவில் கொடிகட்டி பறக்கும் எல்க்ட்ரானிஸ் நிறுவனம் பிலிப்ஸ் (PHILIPS). உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நிறுவனம் இயங்கி வருகின்றன. இவற்றுள் 156 நாடுகளில் உள்ள பிலிப்ஸ் நிறுவனங்களின் பணப்பரிவர்த்தனை தலைமை அலுவலகம் PHILIPS GBS LLP சென்னை தரமணியில் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் தரமணியில் உள்ள நிறுவனத்தில் மேனஜராக வேலை செய்து வரும் ரமேஷ் சொக்கலிங்கம் என்பவர் சென்னை மத்திய குற்றபிரிவில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “எங்களது நிறுவனம் அக்கௌண்டிங் மற்றும் ஐடி சம்மந்தமான துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைத்து நடவடிக்கைகளுக்கும் SAP என்னும் சாப்ட்வேரை பயன்படுத்தி வருகிறோம்.
இந்த SAP சாப்ட்வேர் மூலமாக தான் உலகம் முழுவதும் உள்ள தங்கள் நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், பணபரிமாற்றம் நடைபெற்று வருகிறது. எங்களது நிறுவனத்தில் சீனியர் அக்கௌண்டிங் ஸ்பெசலிஸ்ட் ஆக பணியில் சேர்ந்த அகஸ்டின் சிரில் என்பவரும் மற்றொரு ஊழியருமான ராபின் கிறிஸ்டோபர் என்பவரும் சேர்ந்து ரூபாய் 5 கோடி அளவில் மோசடி செய்துள்ளனர். அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவணங்கள் மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையினர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அகஸ்டின் சிரில் மற்றும் அவரது நண்பரான ராபின் கிறிஸ்டோபர் ஆகிய இருவரும் போலியான வங்கி கணக்கு மூலம் வெளிநாட்டுக்கு பணத்தை அனுப்பி, பின் தங்களது வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி மோசடி செய்திருப்பது அம்பலமானது.
இந்த நிலையில் குற்றவாளிகளின் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள பூர்வீக வீட்டிலும், அவர்களது நெருங்கிய உறவினர்கள் வீட்டிலும் நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அகஸ்டின் சிரில், ராபின் கிறிஸ்டோபர் தங்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த சுமார் 215 சவரன் தங்க நகைகள், 6 லட்சம் ரூபாய் ரொக்கம், ஒரு கார் மற்றும் ஒரண்டு இருசக்கர வாகனங்கள், லேப்டாப், செல்போன்கள் மற்றும் வழக்கு சம்மந்தப்பட்ட ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தொடர்ந்து, தலைமறைவாக இருந்த இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து, அவர்களது செல்போன் சிக்னல் மூலமாக பரமக்குடியில் தலைமறைவாக இருந்த ராபின் கிறிஸ்டோபர் மற்றும் சென்னை அண்ணா நகரில் தலைமறைவாக இருந்த அகஸ்டின் சிரில் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.