சென்னை: எழும்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரண்(28). இரவு நேரங்களில் கஞ்சா போதையில் தலைமைச் செயலக காலனி குடியிருப்பு காவல் நிலையம் மற்றும் ஓட்டேரி பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிவதை வழக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சரண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சரணின் புகாரை வாங்க காவல் துறையினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தற்போது வரை காவல்துறை சரணின் புகாரை எடுக்க மறுக்கிறது என்றும், அவர் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது எவ்வித புகாரும் எடுக்கவில்லை என்றுக் கூறி நேற்று(நவ.13) மீண்டும் கஞ்சா போதையில் ஓட்டேரி காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது காவல் நிலையத்தில் இருந்த காவல் அதிகாரிகள், அவரை வீட்டிற்குச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் போதையில் இருந்த அவர், உடனடியாக சென்னை பெருநகர வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தின் வாயிலில் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுக்கிறார்கள் என கோஷமிட்டபடியே அவரது கையில் வைத்திருந்த பிளேடைக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்தார்.