சென்னை வர்த்தக மையத்தில், இன்று (14.3.2023) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் BRIDGE 50வது மாநாட்டை தொடங்கி வைத்தார். 2030ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைய தமிழ்நாட்டின் பரந்த மனித வளத்தைத் ஆயத்தப்படுத்தும் நோக்கத்துடன், அரசுப் பிரதிநிதிகள், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
உலகெங்கிலும் உள்ள மனிதவள மேம்பாட்டு நடைமுறைகள் சார்ந்த கலந்துரையாடல்களின் மூலம் தமிழ்நாட்டின் மனித வளத்தை பொருளாதார வெற்றிக்கான ஆற்றலாய் மாற்றுவதற்கான கூறுகளை கண்டறிய இம்மாநாடு வழிவகை செய்யும். தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனம் பல்வேறு அரசு துறைகளுடன் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் நிறுவனத்திற்கிடையே வேலைவாய்ப்புத் திறன் மேம்பாட்டுத் திட்டம் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம், 6,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களுக்கு IT, ITeS, Banking Financial Service & Insurance, சில்லறை வணிகம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையுடன் தொடர்புடைய திறன்கள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ”இது தொழில்நுட்ப காலம். தொழில்நுட்பத்தினுடைய யுகமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. மனிதரின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக தொழில்நுட்பப் பொருட்கள் இன்றைக்கு மாறியிருக்கின்றன. செல்போன், கம்ப்யூட்டர், இன்டெர்நெட் போன்றவை நமது அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
தொழில்நுட்பம், இன்று உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. உலகில் எங்கோ ஒரு முனையில் நடக்கும் சம்பவங்கள், இன்னொரு முனைக்கு அப்போதே தெரியக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் மிகப்பெரிய பயன்பாடு கல்வித்துறையில் தான் இருக்கிறது. ஒருகாலத்தில் கல்வி அறிவை நாம் தேடிப் பெற்றோம். ஆனால், இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, கல்வி விரல் நுனியில் வந்துவிட்டது. மேலும் வகுப்பறைகள் நவீனமயமாகிவிட்டன.
கையளவு செல்பேசியில் அனைத்துப் புத்தகங்களும் நமக்குக் கிடைக்கின்றன. மாணவர்கள் அறிவோடு மட்டுமல்ல, அறிவியலோடும் இன்றைக்கு கற்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். மருத்துவத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சியால் நோய் தடுக்கும் முறை, கண்டறியும் முறை, காக்கும் முறை என எல்லாமே இப்போது எளிமையாக வந்திருக்கிறது. தனிமனித பாதுகாப்பையும், சமூகப் பாதுகாப்பையும் உறுதி செய்ய தொழில்நுட்ப வளர்ச்சி இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது.
இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து, நம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் தொழில்நுட்பம் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது. நம் அன்றாட வாழ்க்கையில், தொழில்நுட்பம் பல பிரம்மிப்பூட்டும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. ஒரு காலத்தில் கனவாகத் தோன்றியது எல்லாம், இப்போது உண்மையாக வந்து கொண்டிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் தொழில் முதலீட்டிற்கு இன்றியமையாத தேவைகளான, அறிவியல் மற்றும் சமூகக் கட்டமைப்பையும், மனித ஆற்றலையும் தமிழ்நாடு முழுமையாகக் கொண்டுள்ளது. இதை நன்கு பயன்படுத்தி தகவல் தொழில்நுட்பத் தொழிலை வளர்ச்சி அடையச் செய்யவும், மக்களுக்கு அரசின் முழுப் பயன்கள் சென்று சேர்ந்திடவும், இந்தியாவிலேயே, தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத் துறையில் ஒப்புயர்வற்ற முதன்மை மாநிலமாக உருவாக்கிடவும் தலைவர் கலைஞர் அவர்களது வழியில் செயல்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது.
மருத்துவம், கல்வி, வேளாண்மை மற்றும் அரசுத் துறைகள் அனைத்தையும் டிஜிட்டல் மையமாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். இத்தகைய தொலைநோக்குப் பார்வை கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இந்தத் துறையின் அதிகாரிகள் அனைவருக்கும் எனது பாராட்டுதல்களை, வாழ்த்துகளை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.