சென்னை: ஆதம்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் 27 வயதான விஜய். இவர் மதுபோதைக்கு அடிமையானதாக கூறப்படும் நிலையில், சகோதரர் ராஜேஷ் சென்னை வளசரவாக்கம் ஓம் சக்தி நகரில் உள்ள கிரீன் லைப் பவுண்டேஷன் என்ற போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக, கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி சேர்த்த்துள்ளார்.
அதன் பிறகு சகோதர் ராஜேஷ் அவரை சந்திக்க மையத்திற்கு சென்ற போது ஊழியர்கள் சந்திக்க அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் நவம்பர் 25ஆம் தேதி விஜய்க்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும், ஆகையால் ஊழியர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், செல்லும் வழியில் விஜய் இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மறுவாழ்வு மையத்தின் சார்பில் சகோதரர் ராஜேஷிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ராஜேஷ் அங்கு வந்து விசாரித்த போது, மறுவாழ்வு மையத்தினர் மிரட்டியதாகவும், பிறகு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள சவக்கிடங்கிற்கு சென்று பார்த்த போது விஜயின் கை மற்றும் கால்களில் ரத்தக்கட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ் தனது தம்பி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, வளசரவாக்கம் காவல் நிலையயத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து போலீசார் அந்த மறுவாழ்வு மையத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மறுவாழ்வு மையத்தில் இருந்த சிசிடிவி பதிவுகள் அழிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், அதுகுறித்து மையத்தின் உரிமையாளர் வினோத் குமார், கணக்காளர் குரூஸ், நோயாளிகளை கவனிப்பவர் ராஜ்கிரண் ஆகியோரை வளசரவாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.