சென்னை, திருவிக நகர் ஒத்தவாடை தெரு பகுதியில் வசித்து வருபவர் அஜித்குமார் (24). ரவுடியான இவர் நேற்றிரவு (ஏப்ரல்.19) திருவிக நகர், கோபாலபுரம் அருகே உட்கார்ந்து இருந்தபோது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் திடீரென்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஜித்தை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இதில் அஜித்குமாரின் முகம் மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக அப்பகுதி மக்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அஜித்தை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த திருவிக நகர் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மார்ச் 21ஆம் தேதி அஜித்குமார் அவரது கூட்டாளியான ஜான்சன், கோவிந்த் ஆகியோருடன் சேர்ந்து பிரபாகரன் என்பவரின் தம்பியான விஜயை கத்தியைக் காட்டி மிரட்டி தாக்கியது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அஜித்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் சகோதரரான பிரபாகரன் பழிவாங்கும் நோக்கத்தில் தனது கூட்டாளிகளுடன் சென்று அஜித்குமாரை வெட்டிக் கொன்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய பிரபாகரன், அவரது கூட்டாளியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.