சென்னை:சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதனால் அங்கிருந்த பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றினர். பின்னர் உடற்கூராய்வுக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக, போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட இளைஞர் சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த விஜய் ராஜாராம் என்பது தெரியவந்துள்ளது. பிஇ, எம்.பி.ஏ பட்டதாரியான விஜய் ராஜாராம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கியில் பணியாற்றி வேலையை விட்டு நின்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, வேலையை இழந்து செய்தவறியாத விஜய் ராஜாராம் பல இடங்களில் வேறு வேலை தேடி அலைந்ததாகத் தெரியவருகிறது. ஆனால், பல இடங்களில் தேடியும் எங்கும் சரியான வேலை கிடைக்காததாக கூறப்படும் நிலையில், இவர் மன விரக்தியில் இருந்து வந்ததாகவும் தெரியவருகிறது.
இதையும் படிங்க: நூதன முறையில் பண மோசடியில் ஈடுபட்ட இளம்பெண் - கையும் களவுமாக சிக்கியது எப்படி?
இதனிடையே, ஓராண்டுக்கு முன்பு இவரது வீட்டார் இவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி ஒரே வாரத்தில் இவரை விட்டுப் பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனக்கு சரியான வேலையும் கிடைக்கவில்லை, நல்ல வாழ்க்கையும் அமையவில்லை என்று விஜய் ராஜாராம் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை!
இந்த நிலையில், கிண்டியில் ஒரு கம்பெனிக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்கிறேன் எனக் கூறிவிட்டு, இன்று (ஜூலை 27) காலை வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். இதையடுத்து சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் விஜய் ராஜாராம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல இந்தச் சம்பவம் தொடர்பாக, விஜய் ராஜாராமின் தந்தை ராஜாராம் கொடுத்தப்புகாரின் பேரில் மாம்பலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பழங்குடியின பெண்கள் பாலியல் துன்புறுத்தல் வழக்கு - சிபிஐ விசாரிக்க உத்தரவு!