சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் மீது கொலை, செல்போன் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் டிசம்பர் 20ஆம் தேதி தனது நண்பரான ராமசந்திரன் என்பவருடன் 119 என்ற மாநகர பேருந்தில் துரைப்பாக்கம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஸ்டீபன் கிளோடியா என்பவரிடம் ராமசந்திரன் செல்போன் பறித்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
செல்போன் காணாமல் போனதை உணர்ந்த ஸ்டீபன் ஓ.எம்.ஆர் சீவரம் அருகே பேருந்தை நிறுத்தி, சந்தேக நபரான தினேஷ்குமாரை பிடித்து ரோந்து பணியிலிருந்த துரைப்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக தினேஷ்குமாரிடம் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் விசாரணை நடத்தி அவரது மனைவியான கவுசல்யாவை வைத்து, திருடிய செல்போனை ராமசந்திரனிடம் இருந்து மீட்டுள்ளனர்.
அதன்பின்னர் புகார் வேண்டாமென ஸ்டீபன் கூறியதால் தினேஷ்குமாரிடம் எழுதி வாங்கி கொண்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்த தினேஷ்குமாருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், அருகிலிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துரைப்பாக்கம் காவல்துறையினர் தாக்கியதால்தான் தினேஷ் குமார் உயிரிழந்ததாக அவரது சகோதரர் செந்தில்குமார் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனால் போலீஸ் விசாரணையின் போது மரணம் என திருவிக நகர் போலீசார் வழக்குபதிவு செய்த நிலையில், எழும்பூர் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் லட்சுமி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.