சென்னை: சென்னை மயிலாப்பூரின் ருத்தர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (18). இவர் நேற்று (ஆக.22) தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். உறவினரை சந்தித்தப் பின்னர் மீண்டும் தனது இருசக்கர வாகனத்தில், வள்ளலார் புது பாலத்தின் மீது வந்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு பறந்து வந்த மாஞ்சா நூல், மோகன்ராஜின் கழுத்தை அறுத்தது. இதில் படுகாயமடைந்த மோகன்ராஜ், நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார். உடனடியாக மோகன்ராஜை, அவரது நண்பர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மாஞ்சா நூல் அறுத்து படுகாயமடைந்த இளைஞர் முளையிலேயே கிள்ளி எறிய கோரிக்கை
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திருவொற்றியூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற பரத்குமார், மாஞ்சா நூல் அறுத்து படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்டம் பறக்க விட பயன்படும் மாஞ்சா நூல் பயன்பாடுகள் சென்னையில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர், தற்போது சென்னை முழுவதும் மாஞ்சா நூலில் பட்டம் விடும் கலாசாரம் தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் விபத்துகள் மட்டுமின்றி உயிரிழப்புகளும்கூட ஏற்படுகின்றன.
தடை விதித்ததுடன் மட்டுமல்லாமல் மாஞ்சா நூலை விற்பனை செய்தாலோ, பதுக்கினாலோ சட்ட விரோத நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ள மாஞ்சாநூல் கலாசாரத்தை, காவல் துறையினர் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:அண்டை வீட்டு குளியலறையில் வெப்கேம்: ஓய்வுபெற்ற எஸ்ஐ மகன் கைது