சென்னை:பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(28). இவர் நேற்றிரவு இவரது வீட்டிற்கு அருகில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த இடத்திற்குப் பயங்கர ஆயுதங்களோடு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பிரசாந்தை மட்டும் அழைத்துச் சென்று ஆடைகளைக் கழற்றி அடித்தும், கத்தியால் வெட்டியும் துன்புறுத்தியுள்ளனர்.
கத்தியால் வெட்டும் போது கத்தி பிரசாந்த்தின் பிறப்புறுப்பில் பட்டுவிட்டது. பின்னர் தலை மற்றும் கழுத்து பகுதியில் வெட்டி விட்டுத் தப்பியோடி விட்டனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாந்தை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகக் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கொலையாளிகளைத் தேடி வந்தனர்.