சென்னை:பல்லவன் சாலை, காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது 23). இவரின் மீது போக்சோ உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள பாய்ஸ் கிளப் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது பின்புறமாக வந்த நபர் ஒருவர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து பவுல்ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த பவுல்ராஜை அருகில் இருந்த நபர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பவுல்ராஜின் சகோதரி கனிமொழி அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல்நிலைய போலீசாரிடம் புகார் அளித்து உள்ளார். கனிமொழி கொடுத்த புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உள்ளனர்.
விசாரணையின் போது, அதேப் பகுதியை சேர்ந்த 26 வயது நபர் பவுல்ராஜை வெட்டியது தெரிய வந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், பவுல்ராஜ் மற்றும் அவரை வெட்டிய நபர் நெருங்கிய நண்பர்கள் என்பதும், பவுல்ராஜை வெட்டிய நபருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற்று இரண்டு பிள்ளைகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் பவுல்ராஜ் அடிக்கடி புகாருக்கு ஆளாகியுள்ள நபரின் வீட்டிற்கு வந்தபோது அவரது மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.