சென்னை: தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில், விஷ்ணு என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்பில் 17 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த மிக்ஜாம் புயலின் போது, கனமழை காரணமாக, முடிச்சூர் பகுதி மழைநீரால் மூழ்கிப்போனதால் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள அனைவரும் வீட்டைப் பூட்டிக்கொண்டு தங்களது உறவினர் வீட்டிற்குச் சென்றனர்.
இதையடுத்து மழைநீர் வடிந்தப் பிறகு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய அதன் உரிமையாளர்கள், தங்களது வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த தங்க நகைகள், பணம் எல்லாம் காணாமல் போனதைக் கண்டு அனைவரும் மேலும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து தகவலறிந்த சோமங்கலம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் உள்ள வீடுகளில் குற்றப்பிரிவு போலீசாருடன் இணைந்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில், சரத்குமார் என்பவர் வீட்டில் 17 சவரன் தங்க நகைகள் ரூ.2 லட்சம் பணம், கண்ணன் என்பவர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகளும், விஜயலட்சுமி என்பவர் வீட்டில் 6 சவரன் தங்க நகைகளும் ரூ.1 லட்சம் பணமும், கார்த்திக் என்பவர் வீட்டில் 7 சவரன் தங்க நகைகளும், அருண் என்பவர் வீட்டில் 15 சவரன் தங்க நகைகள் என மொத்தம் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சோமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மழையின் காரணமாக முடிச்சூர் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை. இதனால் குற்றவாளியைக் கண்டு பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு இருந்தது.
இந்நிலையில் கொள்ளையடிக்கப்பட்ட வீடுகளில் சேகரிக்கப்பட்ட கைரேகை பதிவுகள் மற்றும் குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகளின் கைரேகைகள் ஒப்பீடு செய்யப்பட்டது. இதனிடையே சோமங்கலம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளைத் தேடிவந்தனர். பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (எ) கிளியின் கைரேகை ஒத்துப்போனது.
ஏற்கனவே, சூர்யா மீது தாம்பரம், மடிப்பாக்கம், மாங்காடு, எஸ்.ஆர்.எம்.சி, அம்பத்தூர், வில்லிவாக்கம் காவல் நிலையங்களில் 30க்கும் மேற்பட்ட வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த சூர்யாவை கையும், களவுமாகப் பிடித்து சோமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில், 5 வீடுகளில் கொள்ளையடித்தேன் என ஒப்புக்கொண்ட சூர்யாவிடம் இருந்து திருடிய நகைகளில் 15 சவரன் தங்க நகைகளைப் போலீசார் பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:விளா முண்டி வனப்பகுதியை விட்டு வெளியேறிய கரடி.. ஊருக்குள் நடமாடும் சிசிடிவி காட்சி!