கோவை: பொள்ளாச்சி அருகே ஆனைமலை சேத்துமடை அண்ணா நகரில் பிரசித்தி பெற்ற உச்சிமாகாளி அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலில் அதே பகுதியை சேர்ந்த குமார் (45) என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் (ஜன. 3) காலை கோயிலில் பூஜை செய்ய சென்றுள்ளார்.
அப்போது கோயில் கருவறையின் கதவை உடைத்து இளைஞர் ஒருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி, அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு மீண்டும் கோயிலுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அம்மனின் சூலாயுதத்தைத் திருடிக் கொண்டு வெளியே வந்த இளைஞர், மக்கள் ஒன்று கூடி வருவதைக் கண்டு பயந்துள்ளார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட இளைஞர், கையில் இருக்கும் சூலாயுதத்தை கெட்டியாக பிடித்து கொண்டு சாமியாடினார். தொடர்ந்து நான் கேட்பதை தாருங்கள் என மக்களிடம் அவர் கேட்டுள்ளார். இதனை நம்ப மறுத்த மக்கள் இளைஞரின் அருகில் செல்ல முயன்றுள்ளனர். இதனால் பயந்து போன இளைஞர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.