ஆவடி அடுத்த மோரை, கண்ணியம்மன் நகர் சுடுகாட்டு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து எஸ்.ஐ. விமலநாதன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக நடமாடி கொண்டிருந்ததையடுத்து அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து, காவல் துறையினர் இளைஞரை சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சா பொட்டலங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த இளைஞர், ஆவடி அருகே அரக்கம்பாக்கம், ஏகாம்பரம் சத்திரத்தை சேர்ந்த ஜோஸ் என்ற தமிழரசன் (34) என்பது தெரியவந்தது.