தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சினிமாவில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி: ஒருவர் கைது - சினிமா துறையில் வேலைவாய்ப்பு

சென்னை: சினிமா துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 12 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

விக்னேஷ்
விக்னேஷ்

By

Published : Jul 18, 2020, 10:10 PM IST

சென்னை வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினசாமி. இவரது மகன் உதயகுமார். இவர், வெளிநாட்டில் கப்பலில் பணிபுரிந்து வருகின்றார்.

தற்போது உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதால், வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

உதயகுமாருக்கு சிறு வயதிலிருந்தே சினிமாவில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்துவந்துள்ளார். இந்த நிலையில், உதயகுமாருக்கு விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர் தன்னை தொழிலதிபராக இருப்பதாகவும், சினிமாவில் பல்வேறு இயக்குநர்களை தெரியும் என்றும், சினிமாவில் சேர்த்து விடுவதாக உதயகுமாரிடம் ஆசைவார்த்தைக் கூறியுள்ளார்.

ஆனால், இதற்கு 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனக் கூறியதையடுத்து, உதயகுமார் விக்னேஷிடம் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட நாளில் எந்த விதமான வேலையும் பெற்று தராததால் சந்தேகமடைந்த அவர், விக்னேஷ் பற்றி விசாரித்த போது தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால் உதயகுமாரின் தந்தை ரத்தினசாமி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விக்னேஷை தேடி வந்தனர்.

இந்த நிலையில், கோயம்புத்தூரில் பதுங்கி இருந்த விக்னேஷை தனிப்படை காவல்துறையினர் இன்று (ஜூலை.18) கைது செய்தனர். இவர், இதே போன்று வேறு நபர்களிடம் மோசடி செய்துள்ளரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details