சென்னை: தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் தண்டையார்பேட்டை பகுதிகளில் வாலிபர் ஒருவர் வடமாநிலத்தில் இருந்து கஞ்சா, போதை மாத்திரை, ஸ்டாம்ப் எனப்படும் போதை பொருட்களை தனது நண்பர்களுக்கும், அப்பகுதியிலுள்ள இளைஞர்களுக்கும் விற்பனை செய்வதாக வண்ணாரப்பேட்டை தனிப்படை காவலதுறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், உதவி ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர், வண்ணாரப்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த இளைஞர், தனது நண்பர்களுக்கு ஆன்லைன் மூலம் போதை பொருட்களை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
சுற்றி வளைத்த காவல்துறையினர்:இதனையறிந்த தனிப்படை காவல்துறையினர், உடனடியாக மாறுவேடத்தில் சென்று, அந்த இளைஞரிடம் போதை பொருள் வாங்குவது போல், போதைப்பொருள் விநியோகத்தின் போது கையும் களவுமாக சுற்றிவளைத்து, அந்த இளைஞரை கைது செய்தனர்.
பிடிபட்ட இளைஞர் தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜீவா என்கிற ஜீவானந்தன்(24) என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து பட்டதாரி பட்டம் வாங்கியதும், கல்லூரியில் படிக்கும்போது கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானதும் தெரியவந்தது.
மேலும் கல்லூரி முடித்த பின்பு இவர் தொடர்ந்து போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால், இவரது குடும்பத்தார் சைதாப்பேட்டையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் இவரை சேர்த்தனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் கடந்த 2017ஆம் ஆண்டு, போதை பொருட்கள் விற்பனை செய்யும் டார்க்வெப்சைட் உள்ளிட்ட பல இணையதளங்களில், போதை பொருட்கள் வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார்.