சென்னை பெரியார் திடலில் மொழிவாரி மாநிலம் உருவாக்கமும் தமிழ்நாடு பெயர் மாற்றமும் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய முத்தரசன், "ஆந்திர மாநிலம் என்று தனியாக அமைக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு 64 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். நமக்கு முன்னதாகவே ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க 16 பேர் ஆந்திராவில் உயிர் தியாகம் செய்தார்கள். இங்கு 2 பேர் சிறை சென்றார்கள். சங்கரலிங்கனார் மரணமடைந்தார். இது இளைஞர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. இந்த வரலாறுகளை தெரிந்துகொண்டு தியாகம் செய்தவர்களை நினைவுகூர வேண்டும். விடுதலைக்குப் பிறகு இது மிகப்பெரிய போராட்டம். தமிழர்கள் அனைவரும் கொண்டாடவேண்டிய நாள்.
யூனியன் பிரதேசங்கள் மாநிலமாக மாறுவது வரவேற்கத்தக்கது. ஆனால் மாநிலத்தைப் பிரித்து யூனியன் பிரதேசங்களாக்கி அதில் ஒன்றுக்கு சட்டப்பேரவை, மற்றொன்றை நானே டெல்லியிலிருந்து ஆட்சி செய்வேன் என்கிறார்கள். இது தமிழ்நாட்டுக்கு வராது என்று நிச்சயம் உண்டா. நடைபெற்று முடிந்த இருமாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. அந்தச் சரிவை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சக்திகள் ஒருமித்து ஒரேஅணியில் எதிர்த்து நிற்க வேண்டும்" என்றார்.