சென்னை: அரும்பாக்கம் அருகேவுள்ள சேத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தவர் 17 வயது சிறுமி. இவரும், அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (20) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 21ஆம் தேதி மாணவி பள்ளிக்குச் சென்றபோது மாணவியை பிரவீன் அழைத்துச் சென்றுவிட்டதாக மாணவியின் தந்தை கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று (மே 29) காலை பிரவீன் மற்றும் 17 வயது மாணவி ஆகியோர் வழக்கறிஞர் மூலமாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு வந்தனர். இருவரையும் அழைத்து விசாரணை நடத்திய கோயம்பேடு காவல் துறையினர், அவர்களை வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.