சென்னை:பட்டாபிராம் தண்டுரை மேம்பாலம் வழியாக ஆவடியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆரணி நோக்கி தடம் எண் 580 அரசுப்பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது பட்டாபிராம் தண்டுரை மேம்பாலத்தில் ஆவடி நோக்கி, இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் இருவர் வந்துள்ளனர். அப்போது, வேகமாக சென்ற இருசக்கர வாகனம் வலது புறமாக மேம்பால வளைவில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து பேருந்தின் மீது பக்கவாட்டில் பலமாக மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த இளைஞருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு இளைஞர் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் சாலையில் கிடந்தார். இதனைக் கண்ட அவ்வழியே சென்றவர்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் படுகாயமடைந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இளைஞரை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்தது பெரியபாளையம் பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த துளசி மற்றும் திருநின்றவூர் பாலமேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன் என்பதும் தெரியவந்தது. விபத்து ஏற்பட்டதும் அரசுப்பேருந்தை இயக்கி வந்த ஓட்டுநர் அம்பேத்கர் தப்பியோடி பட்டாபிராம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளர். இதனையடுத்து சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் அரசுப்பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் விசாரணை நடத்தினர்.
அரசுப்பேருந்து மீது பைக் மோதி விபத்து விபத்து காரணமாக மேம்பாலத்தில் சுமார் 3 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த பல ஆண்டுகளாக பட்டாபிராம் நெமிலிச்சேரியிடையே மேம்பாலப் பணி நடைபெற்று வருவதால் பாதை மாற்றம் செய்யப்பட்டு பட்டாபிராம் மேம்பாலம் தண்டுரை வழியாக கனரக வாகனங்கள் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் இதுபோன்ற தொடர் விபத்துகள் நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த நபர் - சிசிடிவி மூலம் குற்றவாளிக்கு போலீஸ் வலை!