சென்னை: சூளைமேடு திருவள்ளுவர்புரம் தெருவைச்சேர்ந்தவர், பாண்டியன் (30). ஹோட்டலில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த மூன்று மாதங்களாகப் பாண்டியனுக்கு பணி இல்லாததால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பண கஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ‘Handy loan' மற்றும் 'Rupee loan o cash' ஆகிய ஆன்லைன் லோன் செயலி மூலமாக 15 ஆயிரம் ரூபாய் கடனாக பெற்றதாகத் தெரிகிறது. இதனையடுத்து வாங்கிய கடனுக்கு பாண்டியன் சரிவர வட்டி செலுத்தாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆன்லைன் கடன் செயலியில் இருந்து பாண்டியனின் செல்போன் எண்ணுக்கு 1500 கடன் செலுத்துமாறு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. உடனடியாக பணத்தை கட்டவில்லை என்றால், ஆபாசமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பப்படும் என செயலி மூலம் மிரட்டல் வந்துள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பணம் செலுத்தாமல் பாண்டியன் இருந்ததால், பாண்டியனின் செல்போன் தொடர்பில் இருந்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் செல்போன் எண்ணுக்கு பாண்டியன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவர் எனவும்; வாங்கிய கடனுக்காக பாண்டியனே பாலியல் தொழிலுக்கு அழைப்பது போல ஆபாசமாக சித்தரித்து செயலியில் இருந்து குறுந்தகவல் சென்றுள்ளது.
இதனால் பல நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பாண்டியனிடம் இது குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் தாய், தந்தையருடன் பாண்டியனுக்கு பிரச்னை ஏற்பட்டதால், மன உளைச்சலில் யாரிடமும் பேசாமல் பாண்டியன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று (ஜூன் 20) காலை அதேபோல வீட்டில் பிரச்னை ஏற்பட்டதால், பாண்டியன் அறைக்கதவை மூடியுள்ளார். உடனே குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே செல்வதற்குள் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்த சூளைமேடு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாண்டியனின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.