சென்னை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் 47 வயதுள்ள ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த 27ஆம் தேதி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தனது 16 வயது மகள் காணவில்லை என்றும் தனது மகளை கண்டுபிடித்து தருமாறும் புகாரில் கூறியிருந்தார். அதன் பேரில் திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுயை தேடி வந்தனர்.
மற்றொரு பக்கம் பெற்றோர் சிறுமியை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் சிறுமி ஒரு இளைஞருடன் மேல்மருவத்தூர் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் இருப்பதாக சிறுமியின் தந்தைக்கு தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிறுமி மற்றும் இளைஞர் இருவரும் அங்கு இருந்தனர். இருவரையும் அழைத்துக்கொண்டு திருமங்கலம் காவல் நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
சிறுமி வழக்கு என்பதால் இந்த வழக்கை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் காவல் துறையினர் சிறுமியிடம் விசாரணை செய்ததில், 13 வயதில் இருந்து இன்ஸ்டாகிராம் மூலம் அந்த இளைஞரிடம் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு அண்ணாநகரில் உள்ள ஒரு விநாயகர் கோயிலில் வைத்து தனக்கு தாலி கட்டியதாக தெரிவித்தார்.