சென்னை: கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அன்விதா (வயது 26). இவர் தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தந்தை பிரவீன் என்பவர் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
அன்விதா நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இரவு 7:30 மணி அளவில் அன்விதா உடற்பயிற்சி கூடத்திற்கு உடற்பயிற்சி செய்வதற்காக சென்றுள்ளார்.
அங்கு வார்ம் - அப் (warmup) செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது அதே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர் உடற்பயிற்சி மைய ஊழியர்கள் அன்விதாவை உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள், தீவிர மாரடைப்பால் அன்விதா உயிரிழந்துவிட்டதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனைக்கு வந்து உயிரிழந்ததால் மருத்துவர்கள் முறையாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் இயற்கை மரணம் என்று சான்றிதழ் அளித்து உயிரிழந்த இளம் பெண் மருத்துவரின் சடலத்தை தந்தையிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.