சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு மென்பொறியாளர் சுவாதி என்பவர் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை செய்ததாக ராம்குமார் என்பவரை, ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதேபோல, கடந்த 2021ஆம் ஆண்டு தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சுவேதாவை இளைஞர் ராமச்சந்திரன் என்பவர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். இந்தக் கொலை காதல் விவகாரத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யாவை, சதீஷ் என்பவர் ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார். ஒரு தலை காதல் விவகாரத்தில் இந்த கொலை நடைபெற்றதாகத் தெரியவந்தது.
அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 2ஆம் தேதி ஓ.எம்.ஆர் கந்தன்சாவடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் பிரீத்தி (22) பணியை முடித்துவிட்டு கோட்டூர்புரம் நோக்கி ரயிலில் பயணித்துள்ளார். அப்போது ஒரு நபர் பிரீத்தியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டபோது, திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்,பிரீத்தி. திருவான்மியூர் ரயில்வே காவல் துறையினர் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் மணிமாறன் ஆகிய இரண்டு திருடர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பெண் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் அடையாளம் தெரியாத கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை - ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ்வரி (30) என்ற ராஜி என்னும் இளம்பெண் பழ வியாபாரம் செய்து வந்தார். நேற்று (ஜூலை 19) சைதாப்பேட்டையில் பழ வியாபாரம் செய்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் ராஜேஷ்வரியை வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது.