சென்னை:கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சினேகா பெல்சின் (27). இவர் மும்பை பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் திரைப்படம் தயாரிப்பில் பட்டம் பெற்றுள்ளார். தற்போது சென்னை அமைந்தகரை பகுதியில் வசித்து வருகிறார். பிரபல தனியார் ஆங்கில நாளேட்டில் பத்திரிகையாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், அமைந்தகரை பகுதியில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் . முதல்முதலாக இயக்குநர் பா.ரஞ்சித் உருவாக்கிய தனியார் கலாச்சார யூடியூப் சேனலில் அவரது பணியைத் தொடங்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து, கலாச்சார யூடியூப் சேனலில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்து சவுண்ட் என்ற குறும்படத்தையும் இயக்கி உள்ளார்.
பின்னர், இவர் பிரபல ஆங்கில நாளேட்டில் பணியில் சேர்ந்துள்ளார். அதன் பிறகு ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். இப்படி சமூக வலைதளத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான சினேகா பெல்சின், நேற்று முன்தினம் இரவு தனது தாயாரிடம் அலைபேசியில் பேசிவிட்டு, அவருக்கு "Miss u mom" என உருக்கமாக குறுஞ்செய்தியை பகிர்ந்துவிட்டு அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார்.
சினேகா பெல்சினின் அலைபேசி சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகம் அடைந்த அவரின் தாயார் எதிர் வீட்டில் உள்ள மனோகரன் என்பவரை தொடர்பு கொண்டு அவரது மகளை அழைக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து அவர் சினேகாவின் வீட்டிற்குச் சென்று வீட்டின் கதவை தட்டி உள்ளார்.