சென்னை உத்தண்டி பகுதியைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ராஜசேகர். இவர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் அப்போலோ மருத்துவமனைகளில் மூத்த மருத்துவராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது அசோக் நகரில் கிளினிக் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
மருத்துவர் ராஜசேகர், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். அதில், 'ஜனனி என்பவர் தனது தாயுடன் கடந்த எட்டு வருடமாக, தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருவதன் மூலம் பழக்கமானார். மேலும் அவர் தான் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்துவதாகவும், பங்குச்சந்தையில் எவ்வாறு முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பது குறித்து தனக்கு நன்கு தெரியும் எனவும் தொடர்ந்து தன்னிடம் கூறி வந்துள்ளார்.
தன்னையும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுமாறும்; அதிக லாபம் கிடைக்கும் எனவும் கூறி நம்ப வைத்தார். கடந்த எட்டு வருடமாக சிகிச்சைக்காக வரும் நபர் என்ற காரணத்தினால், நம்பிக்கை அடிப்படையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டேன். அதன் அடிப்படையில் வங்கிக் கணக்கு ஒன்றை ஆரம்பிக்குமாறு ஜனனி கூறியுள்ளார். ஆனால், நீலாங்கரையில் உள்ள அக்கரை HDFC கிளையில் வங்கிக் கணக்கு துவங்கினால் தனக்கு வசதியாக இருக்கும் எனக் கூறியதன் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு வங்கிக் கணக்கை துவக்கி, 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்தேன்.
இந்த பங்கு சந்தையில் வரும் லாபத்தில் 30 சதவீதம் தனக்கு ரொக்கமாக கொடுக்க வேண்டும் என ஜனனி தெரிவித்தார். அந்த அடிப்படையில் பங்குச்சந்தை, பணப்பரிவத்தினை உள்ளிட்ட விவகாரங்களுக்காக அடிக்கடி தன்னை வங்கி கிளைக்கு வருமாறு ஜனனி அழைத்தார். அடிக்கடி வங்கிக் கிளைக்கு செல்வதால், மருத்துவ தொழில் பாதிக்கப்படுவதால் வங்கி பரிவர்த்தனையினை ஜனனியே கையாள்வதற்கு ஏற்றார்போல் வசதி செய்து கொடுத்தேன்.
ஒவ்வொரு முறையும் தனக்கு பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் வந்ததாக தொடர்ந்து கணக்கு காட்டி வந்தார். மேலும் வந்த லாபத்தையும் மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபம் எடுப்பதாக ஜனனி தெரிவித்தார்.
இந்நிலையில் லாபக் கணக்கை காட்டுவதோடு, தன்னுடைய 30 சதவீத கமிஷன் எனக் கூறி 30 லட்சம் ரூபாய் வரையில் எடுத்துக் கொண்டார். அதன் பிறகு லாபம் வந்துள்ளதாகக் கூறி அடிக்கடி கமிஷன் தொகை 30 சதவீதத்தை ரொக்கமாக தன்னிடம் கேட்கும் போது சந்தேகம் ஏற்பட்டு, தன்னுடைய லாபத்தை மீண்டும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம் எனவும் தனது வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படி கேட்ட பிறகு 42 லட்ச ரூபாய் அளவிற்கு அனுப்பினார்.