சென்னை :தேசிய மோட்டர் சைக்கிள் ரேசிங் சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த 13 வயதான பந்தய வீரர் பரிதாபமாக உயிரிழந்தான். சென்னையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் MRF MMSC FMSCI இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப் 2023 தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது.
இந்த போட்டியில் பங்கேற்ற கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 13 வயதான கொப்பரம் ஷ்ரேயாஸ் ஹரீஷ், போட்டியின் போது விபத்தில் சிக்கினார். தலையில் பலத்த காயமடைந்த ஹரீஷ் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் ஹரீஷ் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பிறந்த ஸ்ரேயாஸ் ஹரீஸ், பெங்களூருவில் உள்ள கென்ஸ்ரி பள்ளியில் படித்து வந்தார். மோட்டார் சைக்கிள் மீது கொண்ட அதீத ஆர்வம் காரணமாக, சிறு வயதில் இருந்தே அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்து உள்ளார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட ஹரீஷ், தேசிய அளவில் நான்கு போட்டிகளில் பட்டம் வென்று உள்ளார்.
இந்நிலையில் டிவிஎஸ் நிறுவனத்தின் ஒன்-மேக் சாம்பியன்ஷிப்பின் தொடரின் நடப்பு சீசனில் பங்கேற்றார். இன்று (ஆகஸ்ட். 5) காலை நடந்த ரூக்கி பந்தயத்தில் ஏற்பட்ட விபத்தில் ஹரீஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதல் சுற்று நடந்து கொண்டு இருந்த நிலையில், ஹரீஷின் மோட்டர் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.