சென்னை:பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் (அக்.13) மதியம் தனியார் கல்லூரி மாணவி சத்தியா அவரது வீட்டருகே வசித்து வரும் சதீஷ் என்பவரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கொலையாளி சதீஷை அன்று நள்ளிரவே கைது செய்தனர்.
தொடர்ந்து நேற்று மலை (அக்.14) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர். புழல் விசாரணை கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சதீஷுக்கு கூடுதல் காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவத்துள்ளனர்.
குறிப்பாக கொலையாளி சதீஷிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது, மாணவி சத்தியா தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் அவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுடன் வந்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.