கடலூர்:கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் தண்டேஸ்வரநல்லூர் பத்மாவதி நகரில் வசிக்கும் மாதவன் மகன் பிரபு (25). இவர் அந்தப் பகுதியில் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 02.12.2023-ந் தேதி பிரபு-ம் அவரின் கூட்டாளிகளும் சேர்ந்து ஜெயங்கொண்டம் அருகில் உள்ள ஆமணக்கந்தோண்டி பொன்னேரி கரையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுவதற்காக நின்றுள்ளனர். அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் பிரபு மற்றும் அவர்களின் கூட்டாளிகளையும் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட பிரபு மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் வெளியே வந்தால் பொது ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்குப் பாதகமான முயற்சிகளில் ஈடுபடுவார் என்பதால், அவர் மீது குண்டர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் காமராஜன் கோரிக்கை விடுத்தார்.