சென்னை கொடுங்கையூர், கண்ணதாசன் நகரை பகுதியைச் சேர்ந்தவர் சூரியப்பிரகாஷ். இவர் பழைய வண்ணாரப்பேட்டை வேங்கட கிருஷ்ணன் தெருவில் பூமாலை கட்டி விற்று வந்தார். இவரது அண்ணன் ஜெயக்குமார்.
சூரியப்பிரகாசிற்கும், பிரபல ரவுடி பாட்டில் மணிக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. கஞ்சா புகைப்பதில் ஏற்பட்ட தகராறில், சூரியப்பிரகாஷ் மீது பாட்டில் மணி தாக்குதல் நடத்தினார். இந்தத் தாக்குதலில் பாட்டில் மணியை வெட்டியதாக சூரியப்பிரகாஷ் மீது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் மேயர் பாசு தேவ் தெருவில் குமாரி என்பவர் இறந்த துக்கத்திற்கு நிகழ்விற்கு சூரியப்பிரகாஷ், ஜெயக்குமார் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இருவரும், அங்கிருந்து புறப்பட்டு தண்டையார்ப்பேட்டை, கோதண்டராமன் தெரு வழியாக வந்தனர்.
அங்கு, பாட்டில் மணி அவரின் கூட்டாளிகள் ஐயப்பன், கருப்பு சூர்யா, வடிவேல், ஊசி நரேஷ் ஆகிய நபர்கள் வந்து சூரியப்பிரகாசுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சூரியப்பிரகாஷை சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த ஜெயக்குமாருக்கும் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே சூரிய பிரகாஷ் உயிரிழந்தார்.
தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து தப்பியோடினர். தகவலறிந்து வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அங்கு, உயிருக்கு போராடிய ஜெயக்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சூரிய பிரகாசின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக, தண்டையார்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:இளம்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டிய ஆட்டோ ஓட்டுநருக்கு போலீஸ் வலை!