தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

1 லட்சம் செலுத்தினால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் விளம்பரம்:  ஆசையைத் தூண்டி சிக்கிய கம்பெனி

தமிழ்நாடு முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 20 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு அலுவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

1 லட்சம் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் விளம்பரம் மூலம் சிக்கிய ஃபைனாஸ் கம்பனி
1 லட்சம் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் விளம்பரம் மூலம் சிக்கிய ஃபைனாஸ் கம்பனி

By

Published : May 24, 2022, 10:44 PM IST

சென்னை அமைந்தகரையினை தலைமை இடமாக கொண்டு ஆருத்ரா கோல்ட் நிதிநிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர் பி.ராஜசேகரன் என்பவர் ஆவார்.

தமிழ்நாட்டில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது. சென்னையில் அண்ணா நகர் மேற்கு, ஜே.ஜே. நகர் உள்ளிட்ட இடங்களில் அதிகபட்ச கிளைகளை ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் வைத்துள்ளது.

இந்த நிறுவனம் நகை மீதான கடன் மற்றும் முதலீடு உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த மே 6ஆம் தேதி ஆரணி சேவூர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் கிளை ஒன்றை திடீரென உருவாக்கியுள்ளது. பிறகு நிறுவனம் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் வட்டியாக கொடுக்கப்படும் என்ற விளம்பரம் செய்துள்ளது. இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. இதனை நம்பி பொதுமக்கள் பலரும் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் வங்கிகளே மிகக் குறைந்த வட்டி அளிக்கும் நிலையில் 36% வட்டி எவ்வாறு கொடுக்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. பொதுமக்களிடம் ஆசை காட்டி பணத்தை மோசடி செய்யும் வேலையா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினரும், வருவாய்த் துறையினரும், ஆரணி சேவூர் கிளையில் ஆருத்ரா கோல்டு நிதிநிறுவன அலுவலகத்தில் சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அந்தக் கிளையில் மட்டும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் பொது மக்களிடம் பணத்தை வசூலித்ததாக தெரியவந்தது. மேலும் இந்த விசாரணை முடியும் வரையில் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது என்ற தடையும் வருவாய் துறை தரப்பில் இருந்து உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோல் சென்னையில் இதற்கு முன்னதாக, கடந்த மார்ச் மாதம் இந்த விளம்பரத்தை நம்பி நூற்றுக்கணக்கானோர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தில், இதேபோன்ற திட்டம் அமல்படுத்தப்பட்டு ரகசியமாக மக்களிடமிருந்து முதலீடு செய்யப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக ஆருத்ரா கோல்டு நிதிநிறுவனம் தொடர்பாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் 20க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். முறையாக மத்திய மாநில அரசுகளிடமும், ரிசர்வ் வங்கியிடமும் அனுமதி பெற்றுள்ளதா என சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எந்த அடிப்படையில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது என்பது குறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திலும் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்பொழுது இதுதொடர்பாக ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனத்தின் வழக்கறிஞர் நரேஷ் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

“இது போன்ற திட்டம் எங்களது நிறுவனத்தில் இல்லை. எங்களுடைய பெயரைப் பயன்படுத்தி யாரோ மோசடி செய்கிறார்கள். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவில் உரிய விளக்கம் அளித்துள்ளோம். ஆவணங்கள் ஆய்வுக்காகவே காவல் துறையினர் தற்போது வந்துள்ளனர். அந்த விளம்பரத்தை நாங்கள் வெளியிடவில்லை.

அது தொடர்பாக பத்திரிகைகளில் அறிவிப்பு வெளியிட்டோம். பழைய நகைகளை வாங்கி விற்பது, ரியல் எஸ்டேட், தங்க நகை கடன், தங்க சேமிப்பு திட்டம் இவை தவிர வேறு எதுமில்லை. ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 36 ஆயிரம் தருவதாக எந்த திட்டமும் இங்கு இல்லை. எங்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜசேகர் காவல் துறையிடம் உரிய விளக்கத்தை அளித்துள்ளார். ஆருத்ரா கோல்டு கம்பெனியில் பணம் டெபாசிட் செய்தவர்கள் யாரும் ஏமாறவில்லை”, எனவும் தெரிவித்துள்ளார்.

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 20 இடங்களில் பொருளாதார குற்றப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை

ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனத்தின் கிளைகள் மட்டுமல்லாது அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வீடு ஆகியவற்றிலும் சோதனை தீவிரமாக நடைபெற்று வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சோதனைக்குப் பிறகே இந்த நிறுவனம் எவ்வளவு பேரிடம் பணத்தை வசூல் செய்துள்ளது மற்றும் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சதுரங்க வேட்டை படத்தில் வருவது போன்று ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவரின் ஆசையைத் தூண்ட வேண்டும் என்ற அடிப்படையில் இந்த நிறுவனம் செயல்பட்டுள்ளதா எனவும், மேலும் அதே படத்தில் பாதி விலைக்கு தங்கம் என பொதுமக்களை ஏமாற்றும் காட்சிபோல் இந்த நிறுவனம் செயல்பட்டதா எனவும் விசாரணை முடிவிலேயே தெரியவரும்.

இதையும் படிங்க:மத்திய அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

ABOUT THE AUTHOR

...view details