ஐதராபாத்:" உலக முதலீட்டாளர் மாநாட்டின் முதல் நாளில் நாங்கள் வெளியிட்ட செமிகண்டக்டர் கொள்கை, இத்துறையில் முதலீடுகளை மேலும் ஈர்த்து, வளர்ச்சியை துரிதப்படுத்தும்" இது சென்னையில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டின் நிறைவு நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது. செமிகண்டக்டர்கள் என்றால் என்ன? இதற்கு ஏன் தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் அளித்து தனியாக கொள்கை வெளியிடுகிறது? இது படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன? என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் எழக்கூடும்.
செமிகண்டக்டர் என்றால் என்ன?: செமிகண்டக்டர் என்பவை மின்சாரத்தை தன்வழியாக அனுமதிக்கும் உலோகங்களுக்கும், மின்சார பாய்ச்சலை தடுக்கும் ரப்பர் போன்ற பொருட்களுக்கும் இடைப்பட்ட ஒரு தன்மை உடையவை. தனித்துவமான இந்த தன்மையால், குறைந்த மின்சாரத்தை கடத்தும் தேவை கொண்ட மின்னணு சாதனங்கள் வடிவமைப்பில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரிக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் அனைவரின் கைகளில் இருக்கும் செல்போன் தொடங்கி, மின்சார கார்கள், விமானங்கள் வரை செமிகண்டக்டர்கள் இல்லாத சாதனங்களே கிடையாது.
செமிகண்டக்டர் உற்பத்தி முக்கியத்துவம் பெறுவது ஏன்?:2019ஆம் ஆண்டு கொரோனாவுக்கு பிந்தைய கால கட்டத்தில் உலகத்தின் இயக்கத்தில் டிஜிட்டல் தன்மை தவிர்க்க இயலாததாகிவிட்டது. அதிகப்படியான தேவை, புதிய கண்டுபிடிப்புகளுக்கும், அதிக அளவிலான மின்னணு சாதனங்கள் தயாரிப்பிற்கும் வழி வகுக்கிறது. உலக வர்த்தகத்தில் 20 விழுக்காடு மின்னணு சாதனங்கள் மூலமே நடைபெறுகிறது என்பது தான் இன்றைய நிலை.
தமிழ்நாட்டில் செமிகண்டக்டர் உற்பத்தி:தேசிய அளவில் என்றுமே மின்னணு சாதனங்கள் தயாரிப்புக்கான கேந்திரமாக (HUB) தமிழ்நாடு விளங்குகிறது. சர்வதேச நிறுவனங்களின் ஆராய்ச்சி மையங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி மதிப்பு 2020-21ம் நிதியாண்டில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் , 2022-23ம் நிதியாண்டில் 5.37 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
இது கிட்டத்தட்ட 223 சதவீதம் அதிகம், மின்னணு சாதனங்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருப்பதும் தமிழ்நாடு தான். 2030ம் ஆண்டுக்குள் இந்தியாவில் எலக்ட்ரானிக் சாதன ஏற்றுமதியில் 40 சதவீதத்தை தமிழ்நாடு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது புதிய கொள்கையின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தேசிய அளவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது.
வேலைவாய்ப்புக்கு உதவுமா?:தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய செமிகண்டக்டர் கொள்கை முதலீடுகளை ஈர்ப்பதோடு, திறன்மிக்க இளைஞர்களை உருவாக்குவதற்கான வழிமுறைகளையும் குறிப்பிடுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் எலக்ட்ரானிக் சிப்-கள் ஆராய்ச்சி மையங்களை நிறுவும் நிறுவனங்கள் சம்பளம் வழங்குவதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் முதல் வருடத்தில் 30 சதவீதமும், 2 வது வருடத்தில், 25 சதவீதமும், 3வது வருடத்தில் 20 சதவீதமும் அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகையை மானியமாக தமிழ்நாடு அரசு முதலீட்டாளர்களுக்கு வழங்கும். அதிகபட்ச சம்பளமாக 20,000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இது தவிர உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத மானியமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து முடிவுகளும், தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளை தேர்வு செய்யும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.