சென்னை:நந்தனம் அண்ணா சாலையில் ஒய்.எம்.சி.ஏ உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆபிராகம் பணியாற்றி வந்தார். இங்கு படித்து வரும் 23 வயது மாணவி, சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "கல்லூரி முதல்வர் ஆப்ரகாம், எனக்கு உதவி செய்வது போல கூறி செல்போன் எண்ணை வாங்கினார். அதன்பிறகு எனக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பி பாலியல் தொந்தரவு அளிக்கிறார். பலமுறை எச்சரித்தும் பாலியல் ரீதியாக அத்துமீறுகிறார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், கல்லூரி முதல்வர் மீது பாலியல் தொந்தரவு பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் கல்லூரி முதல்வர் ஆபிரகாமுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் ஒரு மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார். இதற்கிடையே, மாணவி ஒருவரிடம் தனது ஆசைக்கு இணங்குமாறு ஜான் ஆப்ரகாம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவிகளிடம் அத்துமீறும், கல்லூரி முதல்வர் ஆப்ரகாம் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, உடற்கல்வியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர் முதல்வர் ஆப்ரகாம் மீது போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், "வழக்கமாக கல்லூரியின் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி மேற்கொள்வேன். அப்போது அங்கு வந்த முதல்வர் ஜார்ஜ் ஆப்ரகாம் என்னை பாலியல் தொந்தரவு செய்தார். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. விசாரணையில், ஆப்ரகாம் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 9ம் தேதி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சைதாப்பேட்டை போலீசார், கல்லூரிக்கு சென்று புகார் அளித்த மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லூரி முதல்வர் ஆப்ரகாமை இன்று (மார்ச் 11) கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தனிநபர் கடன்களில் ரூ.150 கோடிக்கு மேல் முறைகேடு - கன்னியாகுமரி ஆட்சியரிடம் மனு