சென்னை:சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நாளை(செப்.11) தொடங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு டென்னிஸ் சங்கமும் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் உலக மகளிர் டென்னிஸ் தொடர் நாளை தொடங்க இருக்கிறது. அதில், 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்தப் போட்டியை நடத்துவதற்காக 5 கோடி ரூபாயும், இங்குள்ள விளக்குகளை மாற்றி அமைப்பதற்காக மூன்று கோடி ரூபாயும், விளையாட்டு அரங்கை புதுப்பிப்பதற்காக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.
நாளை தொடங்கி வரும் 18ஆம் தேதி வரை நடைபெற இருக்கிற அனைத்துப் போட்டிகளையும், உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கும் நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சென்னை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் இந்த போட்டியைக் காண உள்ளதாகவும், வெளி மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களும் இந்தப்போட்டியை இலவசமாக காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் டென்னிஸ் பயிற்சி அளிப்பது தேவையான உபகரணங்களை வழங்குவது ஆகிய முயற்சிகளில் ஈடுபட தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தலைவர் அமிர்தராஜ் முன் வந்திருக்கிறார். இந்த சர்வதேச போட்டிக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளிலும் டென்னிஸ் வீரர் வீராங்கனைகளை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.