சென்னை:சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் இணைந்து நடத்தும் சென்னை ஓபன் WTA 250 மகளிர் டென்னிஸ் விளையாட்டு போட்டிகள், சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிமுக செய்தியாளர் சந்திப்பு, இன்று (ஜூன் 30) சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ. மெய்யநாதன் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் விஜய் அமிர்தராஜ் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் முதன்மைச்செயலாளர் அபூர்வா ஐஏஎஸ், துறை சார்ந்த செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில், “சென்னையில் முதன்முறையாக WTA 250 புள்ளிகளுக்காக நடத்தப்படும் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகளுக்கான தகுதிப்போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் 10 மற்றும் 11ஆம் தேதி நடத்தப்படும். மேலும் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகள், வரும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடத்தப்படும்.
செப்டம்பர் 18ஆம் தேதி சென்னை ஓபன் 2022 இறுதிப்போட்டிகள் நடத்தப்படும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.2,50,000 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்” என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அமைச்சர் மெய்யநாதன், “இந்தப் போட்டியினை உலக அளவில் கவனம் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் எண்ணுவதற்கிணங்க, இதை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் விளையாட்டு அரங்கில் மகளிருக்கான சென்னை ஓபன் டென்னிஸ் 2022 போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்தப் போட்டிகள் தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் நடத்தி முடிக்கப்படும். இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த உலக டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு டென்னிஸ் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு நன்றி" எனப் பேசினார்.