அறிஞர் அண்ணா தன் எழுத்தாலும், பேச்சாற்றலாலும் தமிழ்நாடு மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த தலைவர் ஆவார். சமதர்மன் என்ற பெயரில் பல்வேறு சிறுகதைகளை எழுதியுள்ளார். 1950 வாக்கில் அரசியலில் தீவிரமாக இயங்கி வந்த வேளையிலும், அவர் தனது எழுத்துக்கு ஓய்வு கொடுக்கவேயில்லை. மக்களிடம் தனது கருத்து தெளிவாக சென்று சேர வேண்டும் என விரும்பினார். அதனால் அண்ணா தொடர்ந்து எழுதினார்.
அண்ணாவின் சிறுகதைகளில் பல கதைகள் பிரபலம் என்றாலும், கருப்பண்ணசாமி யோசிக்கிறார் என்ற சிறுகதை இந்தியச் சூழலுக்கு என்றென்றும் பொருந்திப்போகும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
கோயில் மணி ஓசை கேட்டதும், கடவுள் கருப்பண்ணசாமி அஞ்சி நடுங்குகிறார். அதைக் கண்டு ஆச்சரியப்படும் கடவுள் தேவி, கோயில் மணியைக் கண்டு ஏன் அஞ்சுகிறீர் என வினவ, கருப்பண்ணசாமி வரிசையாக அதற்கான காரணங்களை அடுக்குவது போல இந்தக் கதை நகர்கிறது.
தேவியிடம் கருப்பண்ணசாமி சொல்கிறார், என்னை கேவலப்படுத்துகிறார்கள் என்று; யார் கேவலப்படுத்துகிறார்கள்? என தேவி கேட்கிறார். நாத்திகர்கள் என்னை கேவலப்படுத்துகிறார்கள் என நினைத்துக் கொள்ளாதே, என்னை கேவலப்படுத்தியது பக்தர்கள்! நாத்திகர்கள் மனிதர்களோடு பழகி, மனிதனின் பிரச்னைகளுக்காக போராடுவது என காலம் தள்ளுகிறார்கள். இந்த பக்தர்கள்தான் தாங்கள் செய்யும் மோசத்தை மறைக்க என்னை துணைக்கு அழைக்கிறார்கள். அதற்கு காணிக்கை கொடுத்துவிட்டு கேள்வி வேறு கேட்கிறார்கள்.