சென்னை: சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனை பட்டியலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில பொழிபெயர்ப்பான பைர் (Pyre) நாவல் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் சர்வதேச புக்கர் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்ட நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து பிரிட்டனிலும், அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படும் நாவலுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பாக புனைவுகளுக்கான புக்கர் பரிசு என்ற பெயரிலும், மான் புக்கர் பரிசு என்ற பெயரிலும் வழங்கப்பட்டது. இதற்காக எழுத்தாளர்கள், நூலகர்கள், இலக்கிய முகவர்கள் என ஏழு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனை பட்டியல் அறிவிக்கப்படுள்ளது. முதல் கட்டமாக 11 மொழிகளில் எழுதப்பட்ட 13 நாவல்கள் பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், தமிழில் எழுதப்பட்டு மொழி பெயர்க்கப்பட்ட 'பைர்' (Pyre), ஸ்வீடிஷ் நாவலான A System So Magnificent It Is Blinding, சீன மொழியில் எழுதி மொழிபெயர்க்கப்பட்ட Ninth Building உள்ளிட்ட நாவல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழ், கேடலான், பல்கேரியா ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்கள் முதல் முறையாக இந்த பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் பரிசைப் பெறும் நாவலுக்கு 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும்.
இது குறித்து நம்மிடையே பேசிய பூக்குழி நாவலின் எழுத்தாளர் பெருமாள் முருகன், "பூக்குழி நாவல் சர்வதேச புக்கர் பரிசு பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இது தமிழுக்கு கிடைத்த பெருமை. 2011ஆம் ஆண்டு கல்கி பத்திரிகையில் தொடராக எழுதிய நாவல் பூக்குழி. அந்த சமயத்தில் ஆணவப்படுகொலை குறித்து அதிகமாக பேசப்பட்டது. சமூக வலையதளங்கள் இல்லாத காலகட்டத்தில் ஆணவப்படுகொலை அதிகளவில் நடைபெற்றாலும் வெளியே தெரியாத சூழ்நிலை இருந்தது. அந்த சமயத்தில் பூக்குழி நாவல் எழுதினேன். இதில் ஆணவக்கொலைக்கு இந்த சமூகம் எப்படி தூண்டுகிறது என்பதை மையமாக வைத்து எழுதியுள்ளேன். இதை அனிருத் வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்" எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "2017ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. யூ.கே எடிஷனாக (UK Edition) 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது புத்தக வெளியீட்டாளர்கள் மூலம் சர்வதேச புக்கர் பரிசு விருதுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நம்முடைய படைப்புகளை ஆங்கிலத்திலும் பிற மொழியிலும் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் இது போன்ற உரிய அங்கீகாரம் கிடைக்கும். தற்போது முதல் கட்டமாக 13 நாவல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி 5 நாவல்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். பின்னர் மே மாதத்தில் இறுதியாக ஒரு நாவல் அறிவிக்கப்படும்" என கூறினார்.